Published Date: September 25, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் உணவு பொருள் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் அறக்கட்டளை மற்றும் வேளாண் உணவு வர்த்தக மையம் ஆகியவற்றின் சார்பில் "வைப்ரன்ட் தமிழ்நாடு" என்ற பெயரில் வேளாண் உணவுப் பொருட்கள் அனைத்துலக வர்த்தகப் பொருட்காட்சி கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இங்கு 150 அரங்குகள் அமைக்கப்பட்டு வேளாண் உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நேற்று நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, வேளாண் அனைத்து உலக சந்தை என்ற புதிய அமைப்பை தொடங்கி வைத்து பேசினார் .
அப்போது அவர் பேசுகையில், பண்டைய காலத்தில் வணிக ரீதியாக முதன் முதலில் கடல் வழி வாணிபத்தை தமிழர்கள் தான் செய்துள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தற்பொழுது தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சிறு, குறு தொழில்கள் மூலம் தங்களது வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி விற்பனை செய்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்தில் பொருளாதாரத்தை ஏற்றுமதி வருவாய் மூலம் உலக அளவில் தமிழ்நாடு முதலிடம் பெறுவதற்கும் உழைத்து வருகிறார். அதை நிரூபிக்கும் வகையில் விவசாயிகள் வர்த்தகரீதியாக முன்னேறுவதற்கு அனைத்து விவசாயிகளும் விலை பொருட்கள் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் பிரவீன் குமார், பொருட்காட்சி படைப்பாற்றல் தலைவர் ரத்தினவேல், பொருட்காட்சி தலைவர் திருப்பதி ராஜன், துணைத் தலைவர்கள் முத்து, சுரேஷ்குமார், பொருளாளர் ரவிக்குமார், ஏற்றுமதி மேம்பாட்டு மைய துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சிறந்த அரங்கத்தில் உரிமையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .
Media: DAILYTHANTHI